இயக்கம் என்பது
உயிரின் அடையாளம்.
இயக்கம் நின்றுபோனால்...
உயிர் நின்றுபோனது என்று பொருள்.
உலகம் இயங்குகிறது.
ஆகு பெயரில் மட்டும் அல்ல.
உலகம் இயங்குகிறது-
உலகத்து மக்களும் இயங்குகிறார்கள்.
பிரபஞ்சம் அனைத்தும் இயங்குகிறது.
பிரபஞ்சத்தில் அனைத்தும் இயங்குகின்றன-
தனித்தனியாக அல்ல
ஒன்றையொன்று சார்ந்து...
ஒன்றுடன் ஒன்று இணைந்து...
நாம் மட்டும் ஏன்...
தனியாக,
தன்னந்தனியாக,
தனியொரு தீவாக-
இயற்கைக்குப் புறம்பாக,
இயங்கிக்கொண்டிருக்கிறோம்.
இயக்கம் என்பது
உயிரின் அடையாளம்.
உண்டு, உறங்கி,
உடுத்து, மகிழ்ந்து
இனத்தைப் பெருக்கிவிட்டுப் போவது அல்ல இயக்கம்.
சக மனிதரோடு கை கோர்த்து
உலகத்தை
முன்னோக்கி-
முன்னைவிட மேலான ஒன்றை நோக்கி
நகர்த்திவிட்டுப் போவதே இயக்கம்.
வாருங்கள் நண்பர்களே!
ஊர் கூடித் தேர் இழுப்போம்.
இயக்கம் என்பது
உயிரின் அடையாளம்.